உலகிற்கு இந்தியா முன் மாதிரியாக இருப்பதற்கு மோடியே காரணம்: எல்.முருகன்

10 மாதங்களில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி உலகிற்கு இந்தியா முன் மாதிரியாக இருப்பதற்கு காரணம் பிரதமர் மோடி தான் என மத்திய இணை மந்திரி எல்.முருகன் தெரிவித்து உள்ளார்.

Update: 2021-10-24 19:37 GMT
இந்தியாவை மீட்கும் பணி

மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2020-ம் ஆண்டின் தொடக்க காலத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று உலகை உலுக்கி வருகிறது. இதனால் மக்கள் அனுபவித்த சோதனைகளும், துன்ப துயரங்களும் கொஞ்சமல்ல. அதனால் மக்களின் துன்பம் கண்டு உள்ளம் துடித்த பிரதமர் நரேந்திர மோடி, “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலாரின் வழி நிற்பவராக இந்தியாவை பெருந்தொற்றில் இருந்து மீட்கும் பணியைத் தொடங்கினார். தடுப்பூசி கண்டுபிடித்தல் மட்டுமே இந்த நோயை கட்டுப்படுத்தும் ஆயுதம் என்று அதற்கான முயற்சிகளில் ஈடுபடுமாறு இந்திய விஞ்ஞானிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

வழக்கம் போல் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியானபோது எதிர்க்கட்சிகள் கேலி பேசியதோடு மக்களிடையே பயத்தையும், பீதியையும் ஏற்படுத்தின. ஆனால் எடுத்த காரியத்தை முடிப்பதில் எப்போதும் உறுதியுடன் இருக்கும் பிரதமர் மோடி தடுப்பூசி தயாரிப்பதிலும் உறுதிகாட்டினார்.

கொரோனா தடுப்பூசி இயக்கம்

அதன் விளைவாக 2021 ஜனவரி 16-ந் தேதி கொரோனா தடுப்பூசி இயக்கம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டது. உலக நாடுகள் பலவும் தடுப்பூசிக்கு ஏங்கியிருந்த காலத்தில் இந்தியா எங்களாலும் முடியும் என்று 2 தடுப்பூசிகளை கண்டுபிடித்து வரலாற்றில் இடம்பிடித்தது. முதலில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், போலீஸ்காரர்கள் என முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியது. வெகு விரைவிலேயே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி-அதுவும் கட்டணமின்றி தடுப்பூசி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்பதை சாதிக்க முடியுமா என்று பேசியவர்கள் வியந்துபோகும் வகையில் 10 மாதங்களுக்குள் 100 கோடி பேர் முதலாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்கள் அரசுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். தடுப்பூசி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி உலகிற்கு இந்தியா முன்மாதிரியாக இருப்பதற்கு காரணமாக உயர்ந்து நிற்பவர் பிரதமர் நரேந்திர மோடி. அது மட்டுமின்றி மிக முக்கியமானவர்களுக்கு முன்னுரிமை என்ற கலாசாரம் அகற்றப்பட்டு அனைவரும் சமம் என்பதற்கு தம்மையே பிரதமர் உதாரணமாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 மாதங்களில் 100 கோடி பேருக்கு

கிராமம், நகரம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கொரோனா வைரசுக்கு இல்லாதபோது அதனை அழிக்கும் தடுப்பூசிக்கும் இருக்கக்கூடாது என்பதில் பிரதமர் உறுதியாக இருந்தார், இதனால் பனிபடர்ந்த காஷ்மீர் முதல் கடல் அலை வீசும் கன்னியாகுமரி வரை காடுகள் அடர்ந்த அருணாசலபிரதேசம் முதல் பாலைவனம் உள்ள ராஜஸ்தானின் தார் பகுதிவரை, கடல் சூழ்ந்த அந்தமான் உள்ளிட்ட தீவுகளுக்கும் தடுப்பூசி அனுப்பப்பட்டு மக்கள் செலுத்திகொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு நிர்வாகம் மட்டுமின்றி தனியார் பங்களிப்பையும் தடுப்பூசி திட்டம் இணைத்துக்கொண்டது. இந்தியாவின் இத்தகைய சாதனையை உலக தலைவர்கள் பலரும் பாராட்டியுள்ளனர். மக்களின் ஒத்துழைப்புடன் எந்த சாதனையையும் படைக்கும் ஆற்றல் தேசத்திற்கு உண்டு. பிரதமர் மோடிக்கு உண்டு என்பதை 10 மாதங்களில் 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்பது நிரூபித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்