விபசார கும்பலிடம் லஞ்சம் வாங்கியதாக வழக்கு: 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை

விபசார கும்பலிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சென்னையில் 2 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவர்களின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

Update: 2021-11-16 23:51 GMT
சென்னை,

சென்னையில் கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக பணியில் இருப்பவர் சாம்வின்சென்ட். சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டராக இருப்பவர் சரவணன். இவர்கள் இருவரும் கடந்த 8.1.2018 முதல் 15.5.2018 வரை சென்னை விபசார தடுப்பு பிரிவில் இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றினர். அப்போது விபசார கும்பலிடம் தொடர்பு வைத்துக்கொண்டு லஞ்சம் வாங்கியதாக புகார் கூறப்பட்டது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் உண்மை இருப்பது தெரிய வந்ததால், 2 பேர் மீதும் லஞ்ச ஊழல் ஒழிப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதிரடி சோதனை

அதன் அடிப்படையில் அவர்கள் வசிக்கும் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய 5 இடங்களிலும் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். சாம்வின்சென்ட் சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார்.

அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் காலை 7 மணி முதல் மாலை வரை சோதனையிட்டனர். இதேபோல் இன்ஸ்பெக்டர் சரவணன் சென்னை புழுதிவாக்கம் ஜெயலட்சுமி நகரில் வசிக்கிறார். அவரது வீட்டிலும் காலை முதல் மாலை வரை லஞ்சஒழிப்பு சோதனை நடந்தது.

இவர்கள் விபசார தடுப்பு பிரிவில் பணியாற்றிய கால கட்டத்தில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார்களா?, இவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் தொடர்பாக ஆவணங்கள் ஏதும் சிக்குமா?, என்பது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே 2 இன்ஸ்பெக்டர்களிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் இவர்கள் மீது அனுப்பிய புகார் அடிப்படையில்தான் லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்