கொரோனா இழப்பீடு: இணையதள முகவரி வெளியீடு..!

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவியினை எளிமையாக பெற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-12-07 16:48 GMT
கோப்புப்படம்
சென்னை,

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. 

இதுகுறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் செயலாளர் குமார் ஜெயந்த் வெளியிட்ட அரசாணையில், “மத்திய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவிகளை வழங்குவதில் சில மாற்றங்களைக் கொண்டு வந்து மத்திய அரசு கடந்த 2015-ம் ஆண்டு ஆணை பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு ஒன்றில் கடந்த ஜூன் 30-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு ஆணை ஒன்றை பிறப்பித்து உள்ளது. அதில், கொரோனா நோய்த் தொற்று காரணமாக குடும்பத்தினர் யாராவது உயிரிழக்க நேர்ந்தால் அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதனடிப்படையில் கொரோனாவினால் உயிரிழப்பு நேரிடும்போது அந்த குடும்பத்தாருக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண உதவி குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.

அதோடு, 2015-ம் ஆண்டு வகுக்கப்பட்ட இலவச நிவாரண உதவி என்பதில் திருத்தங்களை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி மத்திய உள்துறை அமைச்சகம் கொண்டு வந்தது. அந்த திருத்தத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்தால், அது கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவியை வழங்கலாம். கொரோனா தொற்றினால் குடும்பத்தினர் மரணமடைந்த நிலையில், முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் (முன்கள பணியாளர்கள்) பெற்றவர்கள்; இரண்டு பெற்றோரையும் இழந்து ரூ.5 லட்சம் அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து ரூ.3 லட்சம் பெற்ற குழந்தைகளுக்கு இந்த அரசாணை பொருந்தாது” என்று அதில் கூறப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நிதியுதவி எளிமையாக பெற இணையதள முகவரி வெளியிடப்பட்டுள்ளது.  

இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், 

“தமிழ்நாடு அரசின் சார்பில் கொரோனா பெருந்தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்களுக்கு ரூ.50,000/ (ரூபாய் ஐம்பதாயிரம் மட்டும்) நிதி உதவி வழங்க அரசாண வெளியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வாரிசுதாரர்கள் அரசின் இழப்பீட்டு உதவித் தொகை பெறுவதை எளிமையாக்கும் வகையில் https://tn.gov.in என்னும் இணையதளத்தில் “வாட்ஸ் நியூ“ பகுதியில் “Ex-Gratia for Covid-19” எஎன்னும் விண்ணப்பத்திற்கான இணைப்பை தேர்வுசெய்து, ஆன்லைன் (Online) மூலம் விண்ணப்பம் செய்து உதவித் தொகைபெறலாம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்