பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை திட்டம்: பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்வு

பிற்படுத்தப்பட்டோர் கல்வி உதவித்தொகை திட்டம்: பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்வு தமிழக அரசு அறிவிப்பு.

Update: 2021-12-24 20:19 GMT
சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

2021-22-ம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் இந்த பிரிவு மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் இந்த பிரிவு மாணவர்களுக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் 2021-22- ம் ஆண்டிற்கான முதுகலை பட்டபடிப்பு, பாலிடெக்னிக், (டிப்ளமோ-3 ஆண்டு பட்டயப்படிப்பு) தொழிற்படிப்பு, எம்.பி.பி.எஸ்., கால்நடை, பல் மருத்துவம், சித்த மருத்துவம், வேளாண்மை, பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான புதிய விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்