ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

Update: 2022-01-09 04:31 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைகின்றன. இதற்கிடையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 10,978 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. அதே நேரம் ஓமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. 

இதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் தமிழகத்தில் கடந்த 6-ந்தேதி முதல் தினமும் இரவு 10 மணியில் இருந்து காலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவக்கல்வி இயக்குனர் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேலும் செய்திகள்