கொரோனா அதிகரித்து வருவதால் பல்கலைக்கழக தேர்வுகள் தள்ளி வைப்பு அமைச்சர் அறிவிப்பு

கொரோனா அதிகரித்து வருவதால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுகின்றன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

Update: 2022-01-10 23:04 GMT
சென்னை,

கொரோனா பரவல் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டிசம்பர் மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 20-ந் தேதிக்கு பிறகு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் பல்கலைக்கழக தேர்வுகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த உத்தரவு நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும்.

கொரோனா பரவல் தாக்கத்தை பொறுத்து எப்போது தேர்வு நடைபெறும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும். செய்முறை தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும். ஏனெனில் அந்த தேர்வை குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் தான் எழுதுகிறார்கள். தற்போது அனைத்து கல்லூரிகளுக்கும் ‘ஸ்டடி லீவ்’ எனப்படும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அனைத்து கல்லூரிகளிலும் பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பாக தேர்வு தேதி அறிவிக்கப்படும்.

விடுமுறையை பயன்படுத்துங்கள்

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு எந்த தேதியில், எப்படி தேர்வு நடத்துவது என்பதை கலந்து ஆலோசித்து முடிவு செய்வோம். எப்போது தேர்வு வருகிறதோ அப்போது மாணவர்கள் தேர்வை எழுத தயாராக இருக்க வேண்டும். கல்வித்தரம், மாணவர்களின் நலன் ஆகியவற்றை பார்த்து தான் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தற்போது எந்த கல்லூரியும் செயல்படக் கூடாது என்பதை தெளிவாக கூறி உள்ளோம். எந்த கல்லூரியாவது செயல்படுவதாக புகார் வந்தால் கல்லூரியை மூடுவதற்கு உத்தரவிடப்படும்.

மாணவர்கள் தற்போதைய விடுமுறையை பயன்படுத்தி வீட்டில் இருந்து படித்து கல்வி தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். போட்டித் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்