எல்லைப்பகுதியில் போலீஸ் கெடுபிடி

தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் புதுவை எல்லைப்பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தது.

Update: 2022-01-16 18:39 GMT
தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட நிலையில் புதுவை எல்லைப்பகுதியில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்தது.
முழு ஊரடங்கு
தமிழகம், புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவும் வேகம்   அதிகரித்துள்ளது. புதுவையை பொறுத்தவரை நாளொன்றுக்கு 1000-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொற்று பரவலை   கட்டுப் படுத்த தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று 2-வது வாரமாக ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
தீவிர கண்காணிப்பு
இதன் காரணமாக தமிழகத்தில் பஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. புதுவை எல்லைப்பகுதிகளான கோரிமேடு, மதகடிப்பட்டு, மடுகரை, முள்ளோடை, கனகசெட்டிகுளம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக, புதுச்சேரி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதுச்சேரியில்     இருந்து தமிழக பகுதிக்கு செல்லும் வாகனங்களை தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. உரிய காரணங்களை தெரிவித்த பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன.
தடுப்பூசி சான்றிதழ்
அதேநேரத்தில் புதுவையில் ஊரடங்கு எதுவும் அறிவிக்கப்படாததால் தமிழக பகுதிகளில் இருந்து வந்த வாகனங்களை புதுச்சேரிக்குள் போலீசார் அனுமதித்தனர். ஆனால் அந்த வாகனங்களில் வருபவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை காட்டிய பின்னரே அனுமதிக்கப்பட்டனர். தடுப்பூசி போடாதவர்களின் வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
பொங்கல் பண்டிகை முடிந்து நேற்று பலர் புதுச்சேரி திரும்பினார்கள். தமிழகத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டதால் புதுவை திரும்புவதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. அவர்கள் தமிழக பகுதியிலிருந்து கிடைத்த வாகனங்களில் ஏறி புதுச்சேரிக்கு வந்தனர்.

மேலும் செய்திகள்