ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பலி

குளித்துவிட்டு கரையேறியபோது ஆற்றில் மூழ்கி மாணவி உள்பட 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-01-17 21:25 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 50). இவரது மனைவி பத்மாவதி(45). இவர்களும், அதே ஊரை சேர்ந்த உதயகுமாரின் மகள்களான ராதிகா(25), ரேணுகா என்ற லட்சுமி(21), சுப்பிரமணியனின் மகள் சகுந்தலா என்ற சவுந்தர்யா(15), மணிகண்டனின் மனைவி ரஞ்சிதா(25), சரவணனின் மகள் பூஜா(12) ஆகிய 7 பேரும் நேற்று ஒன்றாக சேர்ந்து கல்லாற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதில் லட்சுமி பி.எஸ்சி. பட்டதாரி ஆவார். சவுந்தர்யா வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இனாம்அகரம் கிராமத்திற்கும் அயன்பேரையூர் கிராமத்திற்கும் இடையே கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே ஆற்றில் 7 பேரும் குளித்தனர்.

மண்சரிவு

குளித்து முடித்தவுடன் ராமர், ரஞ்சிதா, பூஜா ஆகியோர் முன்னதாக கரை ஏறி உள்ளனர். பின்னர் பத்மாவதி, லட்சுமி, சவுந்தர்யா, ராதிகா ஆகியோர் தண்ணீரில் இருந்து வெளியேறி கரை பகுதிக்கு வந்து கொண்டு இருந்தனர்.

அப்போது கரையின் ஒரு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு ஆழமான பகுதிக்குள் சரிந்து கொண்டு சென்றுள்ளனர். இதனால் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதற்காக கைகளை கொடுத்து உதவி செய்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக 4 பேரும் தண்ணீருக்குள் விழுந்தனர்.

3 பேர் சாவு

4 பேருக்கும் நீச்சல் தெரியாது என்பதால் நீரில் மூழ்கினர். சத்தம் கேட்டு ஓடிவந்த ராமர் தண்ணீரில் இறங்கி அவர்களை மேலே கொண்டு வந்தார். ஆனால் 4 பேரும் தண்ணீர் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தனர்.

இதையடுத்து உடனடியாக அவர்கள் 4 பேரையும் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதனை செய்து பத்மாவதி, லட்சுமி, சவுந்தர்யா ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். ராதிகா உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்