பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் ரூ.500 கோடி முறைகேடு நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Update: 2022-01-20 23:07 GMT
சேலம்,

தி.மு.க. அரசு தற்போது பொங்கல் பரிசு தொகுப்பாக 21 பொருட்கள் வழங்கியுள்ளது. அதில் அனைத்தும் தரமற்ற பொருளாக இருந்தது. ஒரு சில இடங்களில் 15, 16 பொருட்கள் மட்டுமே வழங்கப்பட்டன.

மேலும் பொருட்கள் எடை குறைவாகவும் இருந்தது. பொங்கல் பரிசு தொகுப்பு கொள்முதலுக்கு தி.மு.க. அரசு ரூ.1,300 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் சுமார் ரூ.500 கோடி முறைகேடு நடந்துள்ளது.

பொய்யாக சோதனை

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் நடந்த முறைகேடுகளை மறைப்பதற்காக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகளின் வீடுகளில் பொய்யாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர்.

ஆர்வம் காட்டவில்லை

ஐகோர்ட்டு தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மாநில தேர்தல் ஆணையத்திற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதன்படி நியாயமாக ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்துவார்கள் என நம்புகிறோம்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தினமும் நான்கைந்து இடங்களுக்கு செல்கிறார். டீ குடிக்கிறார். சைக்கிள் ஓட்டுகிறார். கடந்த 8 மாத கால ஆட்சியில் எந்த வேலையும் செய்யவில்லை. அ.தி.மு.க. அறிவித்த அரசாணையின்படி திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

டெல்லியில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளில் தமிழகம் பங்கு பெற நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் ஆர்வம் காட்டவில்லை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மேலும் செய்திகள்