பெட்ரோல் குண்டு வீச்சில் தி.மு.க.வின் பங்கு; கராத்தே தியாகராஜன் அதிரடி குற்றச்சாட்டு

தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் தி.மு.க.வின் பங்கு உள்ளது என கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு கூறியுள்ளார்.

Update: 2022-02-10 03:24 GMT

சென்னை, 



சென்னையில்  தி.நகர் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டனர்.  முன்னதாக அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை.  3 மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில், அலுவலகத்தின் தரை பகுதியில் வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் காணப்பட்டன.  இந்த சம்பவத்தில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவர், கர்த்தா வினோத் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இதுபற்றி அக்கட்சியை சேர்ந்த கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, அதிகாலை 1.30 மணியளவில் பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டு உள்ளது.  கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற சம்பவத்தில் தி.மு.க.வின் பங்கு இருந்தது.  இந்த சம்பவத்தில் தமிழக அரசை (பங்கை) நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  இதுபற்றி போலீசாருக்கும் தெரிவித்து உள்ளோம்.  இதுபோன்ற சம்பவங்களை கண்டு பா.ஜ.க. அச்சம் கொள்ளாது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்