சூப்பர் முதல்-அமைச்சராக கவர்னர் செயல்படுகிறார்

புதுவையில் போட்டி அரசு நடத்தி சூப்பர் முதல்-அமைச்சராக கவர்னர் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கூறினார்.

Update: 2022-04-16 14:36 GMT
புதுவையில் போட்டி அரசு நடத்தி சூப்பர் முதல்-அமைச்சராக கவர்னர் செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் கூறினார்.
ஆர்ப்பாட்டம்
புதுவை பொறுப்பு கவர்னரான தமிழிசை சவுந்தரராஜனை நீக்கி விட்டு நிரந்தர கவர்னரை நியமிக்கக்கோரி சுதேசி மில் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
தி.மு.க. துணை அமைப்பாளர் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகளின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், திராவிடர் கழக தலைவர் சிவவீரமணி, கம்யூனிஸ்டு (எம்.எல்.) செயலாளர் சோ.பாலசுப்ரமணியன், இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகிகளான முன்னாள் அமைச்சர் விசுவநாதன், அபிசேகம், கீதநாதன், ராமமூர்த்தி, சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது நிருபர்களிடம் இந்திய கம்யூனிஸ்டு தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் கூறியதாவது:-
சூப்பர் முதல்-அமைச்சர்
கவர்னர் பதவியே கூடாது என்ற கொள்கை உடையவர்கள் நாங்கள். புதுவை மாநிலத்துக்கு பொறுப்பு கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளார். ஆனால் நிரந்தர கவர்னர் இல்லை.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு போட்டி அரசை நடத்துகிறார். சூப்பர் முதல்-அமைச்சர்போல் செயல்படுகிறார். அவரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். புதிய கவர்னரை மத்திய அரசு நியமிக்கவேண்டும்.
மாநிலத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவேண்டும். முதல்-அமைச்சரை சுதந்திரமாக செயல்பட விடவேண்டும்.
நீட் விலக்கு மசோதா
தமிழகத்தில் தேனீர் விருந்தை புறக்கணித்தது தொடர்பாக பா.ஜ.க. தலைவர் விமர்சித்துள்ளார். இந்த விருந்து தமிழக மக்களின் வரிப்பணத்தில்தான் நடந்துள்ளது. பொறுப்பற்றவர்கள் பொறுப்பற்ற முறையில் பேசி வருகிறார்கள். அவர்களால் கிண்டல் அடிக்கத்தான் செய்யமுடியும்.
அவர்களுக்கு தமிழக நிதியமைச்சர் பதில் அளித்துள்ளார். தமிழக மக்களின் உணர்வுகளை மதித்து நீட் விலக்கு மசோதாவை கவர்னர் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பவேண்டும்.
இவ்வாறு முத்தரசன் கூறினார்.

மேலும் செய்திகள்