18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

40 வயது என்பதை குறைத்து, 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கைகளுக்கு மாத உதவித்தொகை வழங்க வேண்டும் என்று சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

Update: 2022-04-21 22:14 GMT
சென்னை,

தமிழக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று தி.மு.க. உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி) பேசியதாவது:-

தொகுதி பணிகள்

நான் அரசியலையும், அரசையும் அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றவன். அதன்மூலம், அரசு துறைகள் குறித்து ஓரளவுக்கு சில விஷயங்களையும் தெரிந்துவைத்திருந்தேன். ஆனாலும் இந்தத் துறைகளை நெருங்கி சென்று பார்க்கும் வாய்ப்பை என் தொகுதி பணிகள்தான் எனக்கு வழங்கின.

பலதரப்பட்ட சமூகச் சூழல், வேறுபட்ட பொருளாதார நிலையில் வாழும் மக்களை சந்தித்ததன் மூலம் அவர்களின் தேவைகளையும், உணர்வுகளையும் புரிந்துகொள்ள கிடைத்த பயிற்சி பட்டறையாகத்தான் இந்த ஓராண்டு தொகுதிப் பணிகளை பார்க்கிறேன். இந்த நேரத்தில் முத்தமிழறிஞர் கலைஞரை நினைத்துக்கொள்கிறேன்.

திருநங்கைகள் வாரியம்

தமிழகத்தில் அதிகபட்சம் 25 ஆயிரம் திருநங்கையர் இருப்பார்கள் என்று கணிக்கப்படுகிறது. ஆனால் இதுவரை சுமார் 13 ஆயிரம் பேர்தான் திருநங்கையர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவுசெய்து அடையாள அட்டை பெற்று அரசு திட்டங்கள் மூலம் பயனடைந்து வருகின்றனர். அனைத்து திருநங்கைகளையும் வாரியத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கையர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நான் அறிந்தவரை, தான் ஒரு திருநங்கை, திருநம்பி என்ற தன் மன உணர்வை வீட்டில் வெளிப்படுத்திய நாளில் இருந்தே அவர்கள் ஆதரவற்றவர்களாகி விடுகின்றனர். எனவே 18 வயதுக்கு மேற்பட்ட திருநங்கையர் அனைவரையும் ஆதரவற்றவர்கள் என கருதி அவர்களுக்கு மாத உதவித்தொகையை வழங்க வேண்டும்.

போராட்டம் வாபஸ்

மாநிலத்தில் உள்ள மருத்துவ-பொறியியல்-கலைஅறிவியல் கல்வி நிலையங்கள் அனைத்திலும் தலா ஒரு இடத்தை அவர்கள் இலவசமாக படிக்க ஒதுக்கித்தர ஏற்பாடு செய்யவேண்டும். இதேபோல அரசு-தனியார் அலுவலகங்களிலும் அவர்களின் கல்வித் திறனுக்கேற்ற ஒரு பணியை ஒதுக்கித்தர வேண்டும். தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் திருநங்கையர்களையும் பணியில் அமர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

முதல்-அமைச்சரும், கருணாநிதியைப் போன்றே மாற்றுத்திறனாளிகள் மீது மிகுந்த அன்புகொண்டவர். சமீபத்தில்கூட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியபோது, உடனடியாக அமைச்சர்களையும், துறை அதிகாரிகளையும் அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி ஒரு மணிநேரத்தில் போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார்.

தற்காலிக நடைபாதை

எல்லாவற்றுக்கும் மேலாக மாற்றுத்திறனாளிகளும் இயற்கையின் அழகை ரசிக்க வேண்டும், அதன் பிரமாண்டத்தை உணரவேண்டும் என்பதற்காக சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடலருகில் சென்று கடலை ரசிக்கும் வகையில் தற்காலிக நடைபாதையை அமைத்து தந்தார்.

என் கைகளை பிடித்தபடி, முதல்முறையாக கடல் அலைகளை கண்டு மகிழ்ந்த அவர்களைப் பார்த்தபோதுதான், அவர்களுக்கு இது எப்படிப்பட்ட வாய்ப்பு என்பதை உணர்ந்தேன். அந்த அனுபவத்தை அனைவரும் பெற, தற்காலிக பாதையை நிரந்தர பாதையாக அமைக்கவேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

முதல்-அமைச்சருக்கு நன்றி

கோரிக்கையை ஏற்று அந்த தற்காலிக நடைபாதையை மெரினாவில் மட்டுமின்றி பெசன்ட்நகர் கடற்கரையில் நிரந்தர பாதையாக அமைக்க உள்ளதாக அறிவித்துள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இத்திட்டத்தை கடற்கரை உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.

40 சதவீதத்துக்கு மேல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளின் அனைத்துவிதமான கட்டணங்களில் இருந்தும் விலக்கு அளிக்கவேண்டும். நம் சட்டம் 21 வகை மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்கிறது. ஆனால் இவர்களுக்கான பணியிடங்களை அரசு, தனியார் துறைகளில் நாம் கண்டறிய வேண்டும். இதற்காக ஒரு முழு நேர ஆணையம் அமைக்க வேண்டும்.

உதவித்தொகையை உயர்த்த வேண்டும்

மாற்றுத்திறனாளிகள் அனைத்து பகுதிகளிலும் பரவலாக உள்ளனர். இவர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் குறிப்பிடத்தக்க சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்தும்போது சரியான இடத்தில் வைத்து இவர்களை அணுக வசதியாக இருக்கும்.

இதேபோல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்க நிதிநிலைக்கு ஏற்ப அரசு பரிசீலிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு எந்த வங்கியும் கடன் தருவதில்லை. அதை நேர்செய்யும் வகையில் ‘தாட்கோ’ போல் மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனி நிதியம் உருவாக்கித் தரவேண்டும்.

கருணாநிதி பெயர்

எல்லா பல்கலைக்கழகங்களிலும் மாற்றுத்திறனாளிகள் குறித்த ஆய்வு மற்றும் கற்பித்தலுக்கான துறையை தலைவர் கருணாநிதி பெயரில் உருவாக்கவேண்டும்.

இந்த துறையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் உள்ளன. மாற்றுத்திறனாளி நலத்துறையில் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால், ஆணையத்தில் முறையிடுவது வழக்கம். ஆனால், தற்போது துறையின் இயக்குநரே ஆணையகத்துக்கும் ஆணையராக இருப்பதால், அங்கு முறையீடு செய்ய மாற்றுத்திறனாளிகள் தயங்குவதாகத் தெரிகிறது. ஆகையால், மாற்றுத்திறனாளிகள் ஆணையகத்துக்கு என தனியாக மாற்றுத்திறனாளி ஒருவரை ஆணையராக நியமிக்க வேண்டும்.

ஸ்டாலின் பஸ்

தேசிய அளவில் நகர்ப்புறங்களில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 15.4 சதவீதமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலோ இந்தச் சதவீதம் 21.8 சதவீதமாக இருக்கிறது. நகர்ப்புற பெண்கள் பணிக்கு செல்வதையும், கல்வி கற்பதையும் மேலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் இலவச பஸ் பயணத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது தி.மு.க. அரசு. இதை ‘ஸ்டாலின் பஸ்’ என்றே சொல்கிறார்கள்.

அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு சொல்லும் கதைகள் மூடநம்பிக்கைகள் சார்ந்த கட்டுக்கதைகளாக இல்லாமல், கல்வி-விளையாட்டு-கலை சார்ந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இருந்தால் சிறப்பாக இருக்கும்.

முறையான பயிற்சி

குழந்தைகள் கேட்பதைவிட காணொலிக் காட்சிகளாக பார்ப்பதன் மூலமே அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். வாரம் ஒருமுறை காணொலிக்காட்சியாக ‘புரெஜக்டர்' வசதியுடன் கதைகள்-காட்சிகளை திரையிட்டுக்காட்டுவதன் மூலம் அவர்களின் சிந்திக்கும் திறன், கற்பனை வளம் கூடும். இதற்கு குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி வழங்கும் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

நான் சின்னவன்தான்

தமிழ் சமூகத்தில் மாற்றம் உருவாகப் பிறந்தது, மறுமலர்ச்சி ஏற்படுத்த எழுந்ததுதான் திராவிட இயக்கம். சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் லட்சியத்தோடுதான் இந்த இயக்கம் அரசியல் அதிகாரத்தைக் கையில் எடுத்தது. பொருளாதார திட்டங்களை செயல்படுத்துகிறது.

இங்குள்ள பலர் என்னை ‘சின்னவர்’ என்றும் ‘சேப்பாக்கத்தின் செல்லப்பிள்ளை’ என்றும் அழைப்பதை கேட்கிறேன். இங்குள்ள தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் அனுபவத்துடன் ஒப்பிடுகையில் உண்மையிலேயே நான் சின்னவன்தான். மக்களுக்கு செல்லப்பிள்ளையாக இருந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அதற்கு உங்கள் அனைவரின் அன்பையும், ஆலோசனையும் வழங்குமாறும், வழிகாட்டுமாறும் சபாநாயகர் உள்ளிட்ட இந்த அவையினரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பாராட்டு

ஆட்சிப்பொறுப்பேற்று இந்த ஓராண்டுகளில் தலைவரின் உழைப்பை, மக்கள் பணியைப் பார்த்து எதிர்க்கட்சியினரும் பாராட்டுகின்றனர். “கருணாநிதியைவிட ஸ்டாலின் அபாயகரமானவர்”. இதுதான் நம் முதல்-அமைச்சருக்கு, தலைவருக்கு கிடைத்த மிகச்சிறந்த பாராட்டு.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்