ஸ்டெர்லைட் ஆலையால் மாசு ஏற்படவில்லை - ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளன.

Update: 2022-05-11 11:47 GMT
சென்னை,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 4 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. இந்த ஆலையை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு தரப்பினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம் மாசு ஏற்படவில்லை என மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை திறந்தால் மட்டுமே அந்நிய நாட்டு முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருவார்கள்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வதந்திகளை கிளப்பிய தீய அமைப்புகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் 10 ஆயிரம் குடும்பங்கள் வாழ்க்கையின் கடைசி விளிம்பில் உள்ளன. கடந்த 4 ஆண்டுகளாக தூத்துக்குடியில் பெண்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள். ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்