43 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

ராணிப்பேட்டையில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 43 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வளர்மதி வழங்கினார்.

Update: 2023-06-12 18:00 GMT

குறை தீர்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சர்பாக வீடுகள் வேண்டி, மின்சாரத்துறை சார்பான குறைகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மருத்துவத்துறை, கிராம பொதுப்பிரச்சினைகள், குடிநீர்வசதி, வேலைவாய்ப்பு வேண்டி மனுக்கள் மற்றும் பொதுநலன் குறித்த மனுக்கள் என 290 மனுக்களை கலெக்டர் பெற்றுக் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவி

காரை பகுதியைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் பகுதியில் உள்ள மைதானத்தில் விளையாட்டுப் போட்டிகள், ஊர் திருவிழாக்கள் நடத்தி வருகிறோம். தினமும் ஏராளமான இளைஞர்கள் உடற்பயிற்சி, விளையாட்டு, நடைப்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இங்கு காவலர் குடியிருப்பு கட்ட இருப்பதாக தெரிகிறது. இந்த செய்தி எங்களுக்கு மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. மக்களின் ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், காவலர் குடியிருப்பு கட்டிடம் கட்டுவதை கைவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில் 43 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 94 ஆயிரத்து 650 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் மற்றும் கலெக்டர் அலுவலகம் வரும் மாற்றுத் திறனாளிகளின் பொது பயன்பாட்டிற்காக 5 சக்கர நாற்காலிகளை கலெக்டர் வழங்கினார்.

மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, துணை கலெக்டர் வள்ளி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்