திருவொற்றியூரில் தொழில் அதிபரை கடத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது

திருவொற்றியூரில் தொழில் அதிபரை கடத்திய வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-09-03 07:37 GMT

திருவொற்றியூர், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் சையத் வசீம் அக்ரம் (வயது 33). சென்னை புதுப்பேட்டையில் ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவர், சுகேல் என்பவருக்கு மடிக்கணினி விற்பனை தொழில் செய்வதற்காக ரூ.25 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். அந்த கடனை திருப்பி தருமாறு அடிக்கடி சுகேலிடம் கேட்டதாகவும், இது தொடர்பாக சுகேலின் உறவினர்கள் சையத் வசீம் அக்ரமை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் 16-ந்தேதி காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சையத் வசீம் அக்ரமை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி கடத்திச்சென்றனர்.

இது குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையத் வசீம் அக்ரமை காரில் கடத்தி சென்றவர்கள் குறித்து விசாரித்தனர்.

போலீசார் தேடுவதை அறிந்த கும்பல் சையத் வசீம் அக்ரமை மணலி அருகே இறக்கி விட்டு சென்று விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சையது இம்ரான் (32), சதீஷ்குமார் (36), பிரசாந்த் (27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிைறயில் அடைக்கப்பட்டனர்.இந்தநிலையில் இந்த கடத்தலில் தொடர்புடைய ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த மாரீஸ்வரன் (36), அய்யப்பன் (27), நெற்குன்றத்தைச் சேர்ந்த கோகுல் பிரசாத் (33), சாலி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்பாபு (48), திருவள்ளூரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (30) ஆகிய மேலும் 5 பேரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்