தாட்கோ ஊழியருக்கு 5 ஆண்டு சிறை
அரசு மானியத்தை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.;
அரசு மானியத்தை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ ஊழியருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டு நேற்று தீர்ப்பு வழங்கியது.
ரூ.3 ஆயிரம் லஞ்சம்
திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மாணிக்கம், இவரது மகன் மணிகண்டன். ஆட்டோ டிரைவரான இவர், தாட்கோ மூலம் ரூ.25 ஆயிரம் மானியத்தில் ஆட்டோ வாங்க கடந்த 2007-ம் ஆண்டு விண்ணப்பித்து வங்கியில் கடன் பெற்றார். அவருக்கான மானியத்தை விடுவிக்க தாட்கோவில் இளநிலை உதவியாளராக இருந்த பாலு, ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதை கொடுக்க விரும்பாத மணிகண்டன், இதுபற்றி திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில், மணிகண்டனிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அதை பாலுவிடம் லஞ்சமாக மணிகண்டன் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலுவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
5 ஆண்டு சிறை
இதுதொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. சாட்சி விசாரணை நிறைவடைந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட பாலு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். இதைத்தொடர்ந்து பாலு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜோதிமணி ஆஜர் ஆனார். இந்த வழக்கில் திறம்பட செயல்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரை திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை சூப்பிரண்டு மணிகண்டன் பாராட்டினார்.