பாம்பன் தூக்குப்பாலத்தை கடந்த 50 படகுகள்
பாம்பன் தூக்குப்பாலத்தை ஒரே நேரத்தில் 50 ஆழ்கடல் மீன்பிடி படகுகள் அணிவகுத்து வந்து கடந்து சென்றன.;
ராமேசுவரம்,
பாம்பன் ரெயில் தூக்குப்பாலம்
ராமேசுவரம் அருகே உள்ள பாம்பன் கடலின் நடுவே உள்ள ரெயில்வே தூக்குப்பாலத்தை கடந்து செல்வதற்காக ஏராளமான ஆழ்கடல் மீன்பிடி படகுகள் கடந்த 3 நாட்களுக்கு மேலாக பாம்பன் வடக்கு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் பாம்பன் ரெயில் தூக்குப்பாலம் நேற்று திறக்கப்பட்டது.
இதை தொடர்ந்து வடக்கு கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட படகுகள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்தபடி வந்து தூக்கு பாலத்தை கடந்தன. அவை தென்கடல் பகுதி வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு செல்கின்றன.
பாறை மீது ஏறிய படகுகள்
தூக்குப்பாலத்தை மீன்பிடி படகுகள் கடந்தபோது 2 படகுகள் ஆழமான பாதையை மாறி ஆழம் குறைவான பகுதிக்கு சென்று பாறை மீது ஏறி நின்றன. இதை தொடர்ந்து உடன் வந்த படகுகளில் கயிறு கட்டி அந்த படகை இழுத்து மீட்டனர்.
இதேபோல் புதுச்சேரியில் இருந்து கேரளா செல்வதற்காக கடந்த 5 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாய்மர படகு ஒன்றும் தூக்குப்பாலத்தை கடந்து சென்றது.
ஒரே நேரத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் பாம்பன் தூக்குப் பாலத்தை கடந்து சென்றதை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.