சேலையூர் பள்ளி சிறுமி பலியான வழக்கில் 8 பேர் விடுதலை: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

சேலையூர் பள்ளி சிறுமி பலியான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-02-05 06:06 GMT

சேலையூர் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்த ஸ்ருதி (வயது 6) என்ற பள்ளி மாணவி, கடந்த 2012-ம் ஆண்டு ஜூலை 25-ந் தேதி பள்ளிக்கு சென்று விட்டு மாலை பஸ்சில் திரும்பி வந்த போது, ஓட்டை வழியாக விழுந்து, சக்கரத்தில் சிக்கி பலியானார்.

இந்த விபத்து தொடர்பாக பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவர் சீமான், உதவியாளர் சண்முகம், மெக்கானிக் பிரகாசம், பஸ் உரிமையாளர் யோகேஷ் சில்வேரா, பள்ளி தாளாளர் விஜயன், அவரது சகோதரர்கள் ரவி, பால்ராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் ஆகிய 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து பள்ளி சிறுமி பலியான வழக்கை தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கத்தினர் 100-க்கும் மேற்பட்டோர் தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக மாதர் சங்கத்தின் தாம்பரம் பகுதி தலைவர் ஏ.பிரேமா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.பாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்