கிணற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவர் சாவு

ஈரோடு அருகே நண்பர்களின் கண்முன்னே கிணற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2023-04-15 21:39 GMT

சோலார்

ஈரோடு அருகே நண்பர்களின் கண்முன்னே கிணற்றில் மூழ்கி 9-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

9-ம் வகுப்பு மாணவர்

ஈரோடு அருகே சோலார் கஸ்பாபேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட போக்குவரத்து நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜ். இவருடைய மகன் சஞ்சய் (வயது 15). கஸ்பாபேட்டை அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் சஞ்சய் தன்னுடைய நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றார்.

கிணற்றின் பக்கவாட்டு சுவரை பிடித்தபடி குளித்துக்கொண்டு இருந்த சஞ்சய் ஆர்வத்தின் மிகுதியில் கிணற்றின் நடுப்பகுதிக்கு சென்றுவிட்டார். அவருக்கு நீச்சல் தெரியாததால் நண்பர்களின் கண்முன்னே தண்ணீரில் மூழ்க தொடங்கினார். அதைப் பார்த்த அவருடைய நண்பர்கள் 'காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்' என்று அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் சஞ்சய் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கிவிட்டார்.

பெற்றோர் கதறல்

இதுபற்றி உடனே ஈரோடு தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கிணற்றில் இருந்த தண்ணீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டது. அதன்பிறகு தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி சஞ்சயின் உடலை மேலே கொண்டு வந்தனர்.

மகனின் உடலை பார்த்து அவருடைய பெற்றோர் கதறி துடித்தது பார்க்க பரிதாபமாக இருந்தது. பின்னர் சஞ்சயின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

9-ம் வகுப்பு மாணவர் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோலார் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்