தேனியில் நகராட்சி அதிகாரிக்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்

தேனியில் சாக்கடை கால்வாய் தூர்வாராததை கண்டித்து நகராட்சி அதிகாரிக்கு மாலை அணிவித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

Update: 2022-08-29 16:50 GMT

தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்துக்கு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.சக்கரவர்த்தி தலைமையில் அக்கட்சியினர் சிலர் இன்று வந்தனர். அவர்கள் கையில் ஒரு மாலையுடன் வந்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், "தேனி அல்லிநகரம் நகராட்சி 13-வது வார்டு கம்போஸ்ட் ஓடைத்தெருவில் பல ஆண்டுகளாக சாக்கடை கால்வாய் தூர்வாரப்படவில்லை.

கால்வாய் சேதம் அடைந்து விபத்து அபாயமும் உள்ளது. மேலும் ஆக்கிரமிப்பால் சாக்கடை கால்வாய் சுருங்கி விட்டது. பல முறை கோரிக்கை மனு கொடுத்தும் தூர்வாரப்படவில்லை. நேற்று பெய்த மழையால் மழைநீர் செல்ல வழியின்றி கழிவுநீரும், மழைநீரும் தெருவில் ஆறாக ஓடியது. நகராட்சி அலுவலகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் கூட தூய்மை பணிகள் மேற்கொள்ளாததால் நகராட்சி அதிகாரிகளுக்கு மாலை அணிவித்து கண்டனத்தை பதிவு செய்ய வந்துள்ளோம்" என்றனர்.

பின்னர் அவர்கள், நகராட்சி ஆணையாளர் அறைக்கு சென்றனர். அப்போது அவர் அங்கு இல்லை. இதையடுத்து நகராட்சி மேலாளர் அறைக்கு சென்றனர். அங்கு மேலாளர் பாஸ்கரன் தனது இருக்கையில் அமர்ந்து இருந்தார். அவரிடம் சென்று நகராட்சி ஆணையாளர் இல்லாததால், நகராட்சியின் செயல்பாட்டுக்காக தங்களுக்கு மாலை அணிவிக்க விரும்புவதாக கூறி அவருக்கு மாலை அணிவித்தனர்.

அவரும், பாராட்டு தெரிவிக்க வந்துள்ளதாக நினைத்து மாலையை ஏற்றுக் கொண்டார். பின்னர், அவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்த போது அதிர்ச்சி அடைந்தார். அப்பகுதியில் தேவையான சீரமைப்பு பணிகளை செய்து கொடுப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து பார்வர்டு பிளாக் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இந்த நூதன போராட்டம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்