இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 08-01-2026
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
ஜனநாயகன் தணிக்கை சான்று தொடர்பான வழக்கில் நாளை காலை 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது சென்னை ஐகோர்ட்டு. கே.வி.என் பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இருதரப்பு விசாரணை நேற்று நிறைவடைந்தது.
சென்னை மெரினா கடற்கரையில் குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது 1,417 கடைகள் உள்ள நிலையில், அனைத்து கடைகளையும் நீக்கிவிட்டு குலுக்கல் முறையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் தலா 100 கடைகள் வீதம், பொம்மைகள், உணவகம், பேன்சி கடைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
13கி.மீ. வேகத்தில் இருந்து தற்போது 15கி.மீ. வேகத்தில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென்கிழக்கே 940கி.மீ. தொலைவில் உள்ளது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். தமிழ்நாட்டை நெருங்காது. நாளை (09.01.2026) இரவு இலங்கையில் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா, மரகும்பியில் சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 8 பேருக்கு மருத்துவமனையில் தொடரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டியர் விஜய் அண்ணா, பின்னடைவுகள் ஒருபோதும் உங்களை தடுத்ததில்லை. இதை விட பெரிய புயல்களை நீங்கள் கடந்திருக்கிறீர்கள். இதுவும் கடந்து போகும், ஜனநாயகன் வெளியாகும் நாளில்தான் உண்மையான திருவிழா தொடங்கும் - தணிக்கை பிரச்னையால் ஜனநாயகன் தள்ளிப்போகும் நிலையில் நடிகர் சிலம்பரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரைக் காரணமாக இரண்டு மாதம் தாமதம் ஏற்பட்ட போது கூட, தொடர்ச்சியாக தேதிகள் ஒதுக்கி கொடுத்தார். நயன்தாரா உங்களுடைய ஆதரவுக்கு நன்றி. தன் குழந்தைகளுடன் ஐதராபாத்திலேயே தங்கி படத்தில் நடித்துக் கொடுத்தார். அவர் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். இல்லை என்றால் இந்த நிகழ்வுக்கு அழைத்து வந்திருப்பேன் என ‘மன சங்கர வர பிரசாத்' பட Pre Release நிகழ்வில் இயக்குநர் அனில் ரவிபுடி கூறினார்.
புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து 2 வாரங்களில் அரசாணை வெளியிடப்படும் என மதுரை ஐகோர்ட்டில் அரசுத் தரப்பு தகவல் தெரிவிக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கு விசாரணையின்போது அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஸ்டெர்லைட் உரிமையாளர் அனில் அகர்வாலின் மூத்த மகன் அக்னிவேஷ் அகர்வால் (49) அமெரிக்காவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அனில் அகர்வால்,``இது எனது வாழ்க்கையின் இருண்ட நாள். எனது மகனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நாங்கள் ஈட்டும் வருவாயில் 75 சதவீத தொகையை சமூகத்திற்கு பயனளிக்கும் முயற்சிகளுக்கு அர்ப்பணித்து, இன்னும் எளிமையான வாழ்க்கையை வாழ உறுதிபூண்டுள்ளேன்’’ என உருக்கமாக கூறியுள்ளார்.
"ஜன நாயகன்" படத்திற்கு ஆதரவு தெரிவித்த திரைப்பிரபலங்கள்
அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் 10, 11-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: மாநகராட்சி தகவல்
சென்னை மாவட்டத்தில் 4,079 வாக்குச்சாவடி மையங்களில், தகுதியுள்ள குடிமக்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வசதியாக 2 நாட்கள் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.