பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.;
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள ஒரு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி அங்குள்ள ஒரு அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறாள். சிறு படிக்கும் பள்ளி வளாகத்தில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதில் தொழிலாளர்கள் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவி, பள்ளியின் கழிவறைக்கு சென்றுகொண்டிருந்தாள். அப்போது கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த காடல்குடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகன் கருமுருகன் (வயது 25), மாணவியை வழிமறித்து கையை பிடித்து இழுத்தார். மேலும் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை மாணவிக்கு காட்டி பாலியல் தொல்லை கொடுத்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, கருமுருகனின் பிடியில் இருந்து தப்பிச்சென்று தனது பள்ளி தலைமை ஆசிரியையிடம் கூறி கதறி அழுதாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் அளித்தார். இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கருமுருகன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, அவரை அதிரடியாக கைது செய்தனர்.