பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலின் அடியில் சிக்கி தீப்பிடித்த மோட்டார் சைக்கிள்.. அலறிய பயணிகள்

பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி தீப்பிடித்து எரிந்தது.

Update: 2024-05-24 20:55 GMT

கடலூர்,

கடலூர் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தோப்புக்கொல்லை என்ற இடத்தில் நேற்று காலை மோட்டார் சைக்கிளை தூக்கிக்கொண்டு 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்துக்கு இடையில் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அவர்கள் நீண்ட நேரம் போராடியும் மோட்டார் சைக்கிளை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்த நேரத்தில் காரைக்காலில் இருந்து பெங்களூரு நோக்கி எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகளுடன் முதுநகர் ரெயில் நிலையம் வழியாக வேகமாக வந்துகொண்டிருந்தது. இதை பார்த்ததும் அவர்கள் வேறு வழியின்றி மோட்டார் சைக்கிளை தண்டவாளத்தில் போட்டுவிட்டு தப்பி ஓடினர். இதை பார்த்த என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை கொஞ்சம், கொஞ்சமாக குறைத்தார். அதற்குள் ரெயில் மோட்டார் சைக்கிள் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச்சென்றது.

இந்த விபத்தில் ரெயில் பெட்டிகள் ஆட்டம் கண்டு, கவிழும் நிலைக்கு சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதற்கிடையில் ரெயிலுக்கு அடியில் சிக்கி இருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் டேங்க் உடைந்து திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அதற்குள் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தி கீழே இறங்கினார். பின்னர் ரெயிலில் இருந்த தீயணைப்பு கருவி மூலம் மோட்டார் சைக்கிளில் எரிந்து கொண்டிருந்த தீயை சக ஊழியர்களுடன் சேர்ந்து அணைத்தார். இருப்பினும் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடாக மாறியது.

அதற்குள் ரெயில் பயணிகளும், தோப்புக்கொல்லை கிராம மக்களும் அங்கு கூடினர். பின்னர் ரெயிலுக்கு அடியில் சிக்கி இருந்த மோட்டார் சைக்கிளை கயிறு கட்டி வெளியே இழுத்தனர். ஆனால் வெளியே வரவில்லை. பின்னர் ரெயிலை பின்நோக்கி இயக்கி, நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ரெயிலுக்கு அடியில் சிக்கி இருந்த மோட்டார் சைக்கிளை வெளியே எடுத்தனர்.

பிறகு அந்த மோட்டார் சைக்கிளை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இருப்பினும் சரியான நேரத்தில் மோட்டார் சைக்கிளில் எரிந்து கொண்டிருந்த தீ அணைக்கப்பட்டதால் பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து சுமார் 30 நிமிட தாமதத்திற்கு பிறகு பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்