சென்னைக்கு மூன்றாவது "மாஸ்டர் பிளான்" - தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு பணி தொடக்கம்

சென்னை பெருநகர பகுதிக்கு 3-வது முழுமை திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கப்பட உள்ளதையொட்டி, பயனாளர்களிடம் கருத்துக்களை கேட்க திட்ட தொடக்க பயிலரங்கம் சென்னையில் இன்று நடத்தப்படுகிறது.

Update: 2022-09-19 05:48 GMT

சென்னை:

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம், உலக வங்கியின் உதவியுடன் 'சென்னை பெருநகர பகுதிக்கு 3-வது முழுமை திட்டத்துக்கான (2027-2046) தொலைநோக்கு ஆவணம்' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த ஆவணத்தை பயனாளர்கள் பங்கேற்பு அணுகுமுறை மூலம் சென்னை மாவட்டம், திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் சில பகுதிகளை உள்ளடக்கிய சென்னை பெருநகர பகுதிக்கு (1,189 சதுர கி.மீ.) தயாரிக்கப்படுகிறது.

இந்த 3-ம் முழுமை திட்டத்துக்கான இந்த தொலைநோக்கு ஆவணம், சென்னை பெருநகர பகுதிக்கான நீடித்த சுற்றுச்சூழல், துடிப்பான பொருளாதாரம் மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முழுமையான வளர்ச்சிக்கு திட்டமிட பயன்படும். இதுதொடர்பாக, பல்வேறு பயனாளர்களின் கருத்துக்களை கேட்க, 'திட்ட தொடக்க பயிலரங்கம்' 19-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு சென்னை அண்ணா சாலையில் உள்ள 'ரெயின்ட்ரீ' ஓட்டலில் தொடங்கியது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற உள்ள பயிலரங்கில், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சென்னை பெருநகர பகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இந்த 'திட்ட தொடக்க பயிலரங்கை' தொடர்ந்து சென்னை பெருநகர பகுதிக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்றத்தொகுதியிலும் பயிலரங்கங்கள் நடத்தப்பட உள்ளன.

மேலும், 3-ம் முழுமை திட்டத்துக்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பதை பற்றி பயனாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி பங்கேற்க செய்யும் பிரத்யேக இணையதளம் இந்த பயிலரங்கு நிகழ்ச்சியில் தொடங்கப்பட உள்ளது. இந்த பயிலரங்கின் நேரடி ஒளிபரப்பை பொதுமக்கள் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சமூக வலைத்தள பக்கங்த்தில் https://www.youtube.com/watch?v=ncccd7yzFUQ காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்