அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு புகுந்து மின் மோட்டார்களை திருடிய இளம் ஜோடி

பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்ட இளம் ஜோடி ஒன்று உள்ளே புகுந்து மின்மோட்டார்களை திருடி வந்தனர். திருட்டில் ஈடுபட்ட காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பரவியதால் பொதுமக்களே மடக்கிப் பிடித்தனர்.

Update: 2023-06-09 23:08 GMT

தாம்பரம்,

சென்னை முகப்பேர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 6-வது பிளாக்கை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 32). இவரது மனைவி பூஜா (23). இந்த தம்பதியினர் டிப்-டாப்பாக உடை அணிந்து கொண்டு தினமும் அலுவலகத்திற்கு செல்வது போல வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பி பெருங்களத்தூர் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாத தெருக்களை நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் வாசல்களில் மோட்டார் சைக்கிளில் இறங்கி சொந்த வீட்டுக்கு செல்வது போல் உள்ளே சென்று அங்கிருக்கின்ற மின் மோட்டார்களை திருடி இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு தப்பி சென்று வந்துள்ளனர்.

மின்மோட்டார்கள் திருட்டு

வீடுகளில் இருந்து தினமும் 3 மின்மோட்டார்கள் திருடிவிட்டு அவற்றை விற்று பணமாக்கிவிட்டு வீட்டிற்கு சென்று விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மின்மோட்டார்கள் திருடு போவதை போலீசில் யாரும் புகார் செய்ய மாட்டார்கள். அப்படியே புகார் செய்தாலும் சிறிய திருட்டுக்கு எந்த போலீஸ் நிலையத்திலும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இந்த மோட்டார் திருட்டு ஜோடி தங்களுடைய வேட்டையை தொடர்ந்து வந்தனர்.

பெருங்களத்தூர் தங்கராஜ் நகரில் கடந்த 6-ந் தேதி இந்த ஜோடி மோட்டரை திருடி கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

தம்பதி கைது

இந்த திருட்டு சம்பவ காட்சிகள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் நேற்று மதியம் பழைய பெருங்களத்தூர் அப்துல் கலாம் பூங்கா அருகே குடியிருப்போர் நல சங்க நிர்வாகி பாபு என்பவர் செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் மோட்டாருடன் வந்த ஜோடியை சந்தேகப்பட்டு மடக்கி பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் பேசி உள்ளனர்.

அங்கு திரண்டு வந்த குடியிருப்புவாசிகள் அவர்களை சோதித்த போது, அவர்களிடம் மோட்டார் சைக்கிளில் மின் மோட்டார்கள், பேட்டரிகள் இருந்ததை அறிந்து உடனடியாக பீர்க்கன்காரணை போலீசில் ஒப்படத்தனர். பீர்க்கன்காரணை போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்