பைக் வாங்க 10 ரூபாய் நாணயங்களை மூட்டை கட்டி கொண்டு வந்த இளைஞர் - திகைத்த ஷோரூம் ஊழியர்கள்

ஓசூர் அருகே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தான் விரும்பிய பைக்கை 10 ரூபாய் நாணயம் கொடுத்து வாங்கியுள்ளார்.

Update: 2022-09-05 14:15 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே கெலமங்கலத்தை சேர்ந்தவர் ராஜீவ் (வயது 30). இவர் அங்குள்ள தனியார் நர்சிங் ஹோம் -ல், நிர்வாக இயக்குனராக உள்ளார். இவர் நீண்ட நாட்களாக, புதுமையான அதிக திறன் கொண்ட மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பினார்.

இந்த நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகள், ஓட்டல்கள், டீ கடைகள் பேருந்துகளில் வாங்க மறுக்கின்றனர். அனைத்து இடங்களிலும் 10 ரூபாய் நாணயத்தை செல்லுபடியாக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன் பைக்கை 10 ரூபாய் நாணயமாக வழங்கித்தான் பெற வேண்டும் என்று உறுதி பூண்டார்.

இதற்காக, கடந்த 3 ஆண்டுகளாக தனது நண்பர்கள் சாதிக், யுவராஜ் ஆகியோருடன் மாவட்டம் முழுவதும் அலைந்து, திரிந்து கடைகளிலும் ஓட்டல்கள், பெட்டிக்கடைகள் போன்றவற்றில் 10 ரூபாய் நாணயங்களை சேகரித்தார்.

பின்னர் இன்று அவற்றை 8 பைகளில் கட்டிக்கொண்டு, ஓசூர் ரிங்ரோடு பகுதியில் உள்ள இருசக்கர வாகன ஷோரூமிற்கு வந்தார். அங்கு நிர்வாகிகளிடம் விவரத்தை கூறியதும் அவர்கள் வியப்படைந்தனர்.

மேலும் அவர்கள் நாணயங்களை பெற்றுக் கொண்டு, மோட்டார் சைக்கிளை வழங்கவும் சம்மதித்தனர். இதனைத்தொடர்ந்து, பைகளில் இருந்த 10 ரூபாய் நாணயங்களை தரைக்கம்பளத்தில் கொட்டி, எண்ணும் பணியில் ஷோரூம் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

3 மணி நேரம் எண்ணப்பட்டு, அதில் தவணைத்தொகை ரூ.1,80,000/- இருந்ததையும்,, மீதித்தொகையை லோன் மூலம் வழங்க ராஜீவ் உறுதியளித்ததையும் ஏற்றுக் கொண்டு, ஷோரூம் நிர்வாகத்தினர் "அப்பாச்சி ஆர்.ஆர்.310" என்ற புதிய ரக நவீன வடிவமைப்பு கொண்ட மோட்டார் சைக்கிளை அவரிடம் ஒப்படைத்தனர்.

அதனை பெற்றுக்கொண்டு ராஜீவ் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு சென்றார். இந்த ருசிகர சம்பவத்தால் ஷோரூம் பகுதியில் கலகலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்