இறைச்சிக்கடை உரிமையாளர் கொலையில் மருமகன் உள்பட 2 பேர் கைது

Update: 2023-05-31 15:45 GMT


திருப்பூரில் இறைச்சிக்கடை உரிமையாளரை கொலை செய்த மருமகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 2 பேரை போலீஸ் தேடுகிறது.

இறைச்சி கடை உரிமையாளர்

மதுரை மாவட்டம் நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சலீம் முகமது (வயது 45). இவருடைய மனைவி மும்தாஜ். முகமது சலீம் மனைவி மற்றும் 3 மகள்களுடன் திருப்பூர் போயம்பாளையத்தை அடுத்த ராஜாநகரில் வசித்து வந்தார்.

மேலும் அவர் அந்த பகுதியில் இறைச்சிக்கடை வைத்து நடத்தி வந்தார். சலீம் முகமது மூத்த மகள் ஷகீலா பானுவுக்கும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஷபிபுல்லா என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அடித்துக்கொலை

ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷகீலாபானு திருப்பூரில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் குடும்பத்தகராறு காரணமாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஷபிபுல்லா, அவருடைய தந்தை முகமது மீரான், தம்பி அயூப்கான், சகோதரி சபீனா ஆகியோர் நேற்று முன்தினம் திருப்பூரில் உள்ள சலீம் முகமது வீட்டிற்கு வந்தனர்.

அங்கு பேசிக்கொண்டிருந்தபோது இரு குடும்பத்தினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரும் கிரிக்கெட் மட்டையால் சலீம் முகமதுவின் தலையில் ஓங்கி அடித்தனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

2 பேர் கைது

தடுக்க வந்த அவருடைய மனைவி மும்தாஜூம் படுகாயமடைந்தார். இதையடுத்து ஷபிபுல்லா மற்றும் அவருடைய குடும்பத்தினர் 4 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், ஷபிபுல்லா உள்ளிட்ட 4 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஷபிபுல்லா மற்றும் அவருடைய தம்பி அயூப்கான் ஆகியோரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ஷபிபுல்லாவின் தந்தை முகமது மீரான், சகோதரி சபீனா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்