ரூ.19 லட்சம் கடனுக்காக ரூ.40 லட்சம் கேட்டு மிரட்டல்: கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை-2 பேர் கைது

சேலத்தில் ரூ.19 லட்சம் கடனுக்காக ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதால் கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-24 22:12 GMT

கணவன்-மனைவி தற்கொலை

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் சைக்கிள் பழுது பார்க்கும் கடை வைத்திருந்தார். இவரது மனைவி சாந்தி (55). இவர்களுக்கு ராமகவுண்டர், ராமவேல் என்ற 2 மகன்களும், தமிழரசி என்ற ஒரு மகளும் உள்ளனர். இவர்களில் ராமகவுண்டர் தனியார் கல்லூரி ஒன்றில் ஓமியோபதி டாக்டராகவும், ராமவேல் ஆட்டோ ஓட்டியும் வருகிறார். ராஜேந்திரன் தனது மகன்களுடன் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை ராமவேல் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார். அப்போது கீழ்தளத்தில் உள்ள பெற்றோரின் அறை கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வாயில் நுரை தள்ளியப்படி தனித்தனி கட்டிலில் பெற்றோர் இறந்து கிடந்ததை பார்த்து ராமவேல் அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர்கள் அருகே விஷ பாட்டிலும் கிடந்தது. இதனால் அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுடைய உடல்களை பார்த்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர் காந்திமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட ராஜேந்திரன், சாந்தியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து கணவன்-மனைவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ராஜேந்திரன் கடந்த 2015-ம் ஆண்டு வீடு கட்டுவதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் ரூ.15 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதன்பிறகு அவர் அந்த பணத்துக்குரிய வட்டி கட்டவில்லை. இதனால் வட்டியுடன் சேர்த்து ரூ.18 லட்சம் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இதுதொடர்பாக 2018-ம் ஆண்டு வங்கி சார்பில் அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

கடன் வாங்கினார்

இதையடுத்து அவர் அதே பகுதியை சேர்ந்த நடேசன் (75) மூலம் உலகநாதன் (47) என்பவரிடம் ரூ.19 லட்சம் கடன் வாங்கினார். இந்த பணத்தை கொண்டு வங்கி கடனை அடைத்தார். ஆனால் அவரால் உலகநாதனிடம் பெற்ற கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை. தற்போது கந்து வட்டி சேர்த்து ரூ.40 லட்சம் உடனே தருமாறு கடன் கொடுத்தவர்கள் ராஜேந்திரனை மிரட்டி உள்ளனர். கடன் தொல்லை அதிகரித்ததால் வீட்டை விற்று கடனை அடைக்க போவதாக நண்பர் ஒருவரிடம் ராஜேந்திரன் கூறி உள்ளார்.

இதற்கிடையில் மிகவும் மன உளைச்சலில் காணப்பட்ட ராஜேந்திரன் தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் தண்ணீரில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 பேர் கைது

இதற்கிடையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக ராஜேந்திரன் எழுதிய கடிதம் ஒன்றை அவருடைய அறையில் இருந்து போலீசார் கண்டெடுத்தனர். அதில், எங்களுக்கு கடன் கொடுத்தவர்கள் அந்த பணத்தை கேட்டு தொந்தரவு கொடுத்தனர். இதனால் எங்களுடைய சாவுக்கு ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 6 பேர் காரணம் ஆவார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் கந்துவட்டி கேட்டு ராஜேந்திரனை தொடர்ந்து தொந்தரவு செய்ததாக உலகநாதன், நடேசன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்