செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update:2023-05-01 00:15 IST

கோவை

கோவையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 575 கிலோ மாம்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கடைகளில் திடீர் ஆய்வு

கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் தலைமையில் கோவை மாவட்டத்தில் கடந்த 24-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 5 நாட்கள் மாவட்டம் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக தர்ப்பூசணி, மாம்பழங்கள் விற்பனை செய்யும் கடைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர். இதில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 575 கிலோ மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் கூறியதாவது:-

செயற்கை முறையில் பழுக்க வைப்பு

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பழ வகைகள், குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர். இந்த நிலையில் மாம்பழம், வாழைப்பழம், சாத்துக்குடி உள்ளிட்ட பழ வகைகளை இயற்கையான முறையில் பழுக்க வைக்காமல் விரைவாக பழுக்க வைத்து விற்பனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கால்சியம் கார்பைடு கல், எத்தீலின் ரசாயன பவுடர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கின்றனர்.

இதுபோன்ற செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் கண் எரிச்சல், வாந்தி, பேதி, நரம்பு தளர்ச்சி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படலாம். ஆர்கானிக் மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் புற்று நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

பழங்கள் பறிமுதல்

இதையடுத்து கோவை மாநகர் உள்பட மாவட்டம் முழுவதும் 231 கடைகள், குடோன்களில் ஆய்வு செய்ததில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 575 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.72 ஆயிரம் ஆகும். மேலும் இந்த ஆய்வின் போது அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் உபயோகித்த 30 சில்லறை விற்பனை கடைகளுக்கு ரூ.60 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதுதவிர சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி செய்யும் 22 நிறுவனங்கள் மற்றும் 135 குடிநீர் வினியோகஸ்தர்களின் குடோன்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முறையாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தயாரிக்காத 4 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.பொதுமக்கள் தாங்கள் வாங்கும் பொருட்களின் தரத்தில் குறைபாடு அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாட்டை கண்டறிந்தால் அதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்