பெத்தேல் நகர் ஏழை மக்களின் குடியிருப்புகளை அகற்றக்கூடாது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-07-15 06:23 GMT

சென்னை, சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் சுமார் 3 ஆயிரம் குடும்பங்களை வெளியேற்றுவதற்கு சேகர் என்பவர் பொய்யான ஆவணங்கள் மூலமும், போலி நபர்களைக் கூட்டுச் சேர்த்துக் கொண்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இப்பகுதி சதுப்பு நிலம் என 2013-ம் ஆண்டில் உத்தரவு பெற்றார்.

இந்த உத்தரவை எதிர்த்து பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு 25.11.2015 அன்று தமிழக அரசும், நிலவருவாய் ஆணையரும் இப்பகுதி சதுப்பு நிலம் இல்லை எனவும், 'அ' பதிவேட்டில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும், இப்பகுதியில் ஏராளமான மக்கள் வீடு கட்டி குடியிருந்து வருவதால் இம்மக்களுக்கு நில ஒப்படைப்பு செய்து பட்டா வழங்கிடலாம் என நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்தனர்.

ஆனால், இதை மறைத்து 2013-ம் ஆண்டு உத்தரவின் அடிப்படையில் நீதிமன்ற அவமதிப்பு என ஐகோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டு இப்பகுதி மக்களின் வீடுகளை அகற்றுவதற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (நேற்று) விசாரணைக்கு வந்தது. இதில், அரசு பதில் அளிக்கவும் அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக கொண்டு தமிழகத்தின் இதர பகுதிகளில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்