திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மர்ம சாவு

திருமணமாக 2 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் பிரேத பரிசோதனை செய்வதற்கு அலைக்கழிப்பு செய்யப்பட்டதால் அதிருப்தியடைந்த உறவினர்கள் தஞ்சையில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-24 20:48 GMT

புதுப்பெண் சாவு

தஞ்சை மாவட்டம், திருவையாறு அருகே உள்ள மேலத்திருப்பூந்துருத்தி அற்புத மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் சார்லஸ் மகன் விவேக் (வயது 35). சென்ட்ரிங் வேலை செய்து வரும் இவருக்கும், தஞ்சை கரந்தை சருக்கை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த கிருபையன் மகள் மார்த்தாள் மேரிக்கும் (29) கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

அடுத்த சில நாட்களில் தாய் வீட்டுக்கு வந்த மார்த்தாள் மேரி அங்கேயே தங்கிவிட்டார். இந்த நிலையில், கடந்த 22-ந் தேதி மார்த்தாள் மேரியை உறவினர்கள் அழைத்துச்சென்று கணவர் வீட்டில் விட்டனர். நேற்று அதிகாலை மார்த்தாள் மேரிக்கு உடல்நிலை சரியில்லை எனக் கூறி, அவரை விவேக் திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று காட்டினார். அங்கு மார்த்தாள் மேரியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறினார்.

சந்தேகம் இருப்பதாக புகார்

இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் மார்த்தாள் மேரியின் பெற்றோர் அளித்த புகாரில், தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து மார்த்தாள் மேரியின் உடலைக் கைப்பற்றி, திருவையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.

ஆனால், திருவையாறு ஆஸ்பத்திரியில் விவேக்குக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதால், தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என மார்த்தாள் மேரியின் உறவினர்கள் வலியுறுத்தினர். இதன்படி, தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மார்த்தாள் மேரியின் உடல் கொண்டு செல்லப்பட்டபோது, இடமில்லை எனக்கூறி அங்குள்ள ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.

உறவினர்கள் சாலைமறியல்

இதனால், அதிருப்தியடைந்த மார்த்தாள்மேரியின் உறவினர்கள் கரந்தை சருக்கை பகுதியில் நேற்று மாலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் பிரேத பரிசோதனை முறைப்படி நடைபெறும் என கோட்டாட்சியர் உறுதியளித்ததின் பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் மார்த்தாள் மேரிக்கு திருமணமாகி 67 நாட்களில் இறந்ததால், அவரது சாவு குறித்து தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா தனியாக விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்