தரமற்ற விதைகளால்500 ஏக்கர் நெல் சாகுபடி பாதிப்பு:கலெக்டரிடம் விவசாயிகள் புகார்

மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பகுதிகளில் தரமற்ற நெல் விதைகளால் 500 ஏக்கர் நெல் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

Update: 2023-02-20 18:45 GMT

நெல் பாதிப்பு

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை தாங்கி கோரிக்கை மனுக்களை வாங்கினார்.

கூட்டத்தில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாநில நல வாரிய உறுப்பினர் கருப்பையா தலைமையில் மாற்றுத்திறனாளிகள் சிலர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், 'தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அமைந்துள்ள பகுதி உயரமாக உள்ளது. அங்கு மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சிரமம் அடைகின்றனர். அந்த அலுவலகத்தை கலெக்டர் அலுவலகத்தின் கீழ் பகுதியில் கட்டிக் கொடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நடத்தும் போது டாக்டர்கள் தாமதமாக வருவதால் மாற்றுத்திறனாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது' என்று கூறப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் சிலர் கொடுத்த மனுவில், 'மார்க்கையன்கோட்டை, குச்சனூர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட நெல் ரகம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட அந்த ரக நெல்லில் நோய் தாக்குதல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். தரமற்ற அந்த நெல் விதைகளை தடை செய்ய வேண்டும்' என்று கூறியிருந்தனர்.

தமிழ்நாடு மாநில பிரமலைக்கள்ளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சிலர் கண்களை துணியால் கட்டிக் கொண்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுவில், "எங்கள் இன பெண்ணை இழிவாக சித்தரித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் உண்மைத்தன்மையை அறியாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும். பெண்ணை இழிவு படுத்திய அனைவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்