மெழுகுவர்த்தி ஏந்தி பேராசிரியர்கள் போராட்டம்

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-04-20 19:00 GMT

திண்டுக்கல்லை அடுத்த காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பதிவாளர் சிவக்குமாருக்கு 2-வது முறையாக பணி நீட்டிப்பு வழங்கியதை ரத்து செய்ய வேண்டும், நிரந்தர பதிவாளரை நியமனம் செய்ய வேண்டும், காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக பேராசிரியர்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் பேராசிரியர்கள் வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு, கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பெல் மைதானத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மூத்த பேராசிரியர் வில்லியம் பாஸ்கரன் சிறப்புரையாற்றினார். இந்த போராட்டத்தில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டம் குறித்து சங்க செயற்குழு உறுப்பினர் மணிவேல் கூறுகையில், எங்களது ஒரு வார கால போராட்டத்துக்கு நிர்வாகத்தில் இருந்து எந்த ஒரு முடிவும் எட்டப்படாமல் உள்ளது. எங்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்துக்கு வருவதாக கூறி வருகின்றனர். ஆனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்பதால் அவர்களை ஈடுபட வேண்டாம் என தடுத்து வருகிறோம். ஆனால் எங்கள் போராட்டத்தை நிர்வாகம் அலட்சியம் செய்தால், எங்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட வந்தால், அதை நாங்கள் தடுக்க மாட்டோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்