கோயம்பேட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு - போக்குவரத்து நெரிசல்

கோயம்பேட்டில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-02-05 06:44 GMT

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் அரிபாபு (வயது 46). வக்கீலான இவர், சேலத்தில் இருந்து சென்னைக்கு வேலை காரணமாக தனது காரில் வந்தார். காரை டிரைவர் அன்பரசு ஓட்டினார். நேற்று மாலை திருமங்கலம் நோக்கி காரில் சென்ற போது, கோயம்பேடு 100 அடி சாலையில் மேம்பாலம் கீழே திடீரென காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரிபாபு மற்றும் டிரைவர் அன்பரசு காரில் இருந்து உடனடியாக இறங்கி ஓடினார்கள். அப்போது காரில் எழுந்த தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதைககண்டு அதிர்ச்சியடைந்த அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து ஜெ.ஜெ.நகர் தீயணைப்பு போலீசார் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து காரில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். இதில் கார் முற்றிலும் தீயில் எரிந்து நாசமானது. மேலும் காரில் இருந்த லேப்டாப் மற்றும் வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் தீயில் எரிந்து நாசமானது.

இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து கார் தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்