கிரிஸ்டல் பந்துகளை தடை செய்யக்கோரிய வழக்கு - மத்திய அரசுக்கு மதுரை ஐகோட்டு கிளை கெடு

மத்திய அரசு தரப்பில் ஏப்ரல் 2-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2024-02-29 15:16 GMT

மதுரை,

மதுரை ஐகோர்ட்டு கிளையில் கார்த்திக் கண்ணன் என்பவர் கடந்த 2018-ல் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "சிறிய மற்றும் பெரிய அளவிலான கடைகளில் குழந்தைகளின் விளையாட்டு பொருட்களாக கிரிஸ்டல் பந்து விற்கப்படுகிறது. இந்த கிரிஸ்டல் ஜெல்லி பந்து தண்ணீரில் ஊற வைத்து பெரிதாக்கி விளையாடப்படுகிறது.

இந்த பந்தை குழந்தைகள் விழுங்கி விட்டால், உயிருக்கே ஆபத்தாகி விடும். இந்த பந்துகளை விற்பனை செய்ய பல்வேறு மாநிலங்களில் தடை உள்ளது. ஆனால், தமிழகத்தில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இதில் எந்த ஒரு எச்சரிக்கை அறிவிப்பும் இல்லை. இந்த அபாயகரமான கிரிஸ்டல் பந்துகளின் விற்பனையை தடை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த பந்து வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இதில் மாநில அரசுக்கு எந்த பங்கும் இல்லை. மாநில அரசு தனிப்பட்ட முறையில் தடை விதிக்கவும் முடியாது" என்று விளக்கமளித்தார்.

இதையடுத்து மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் புகார் குறித்து மத்திய அரசு தரப்பில் தகவல் கேட்டு தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி, "இந்த வழக்கு கடந்த 2018-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. இதுவரை மத்திய அரசு தரப்பில் இருந்து எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை. எனவே, ஏப்ரல் 2-ந்தேதிக்குள் மத்திய அரசு தரப்பில் உரிய பதில் அளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், மத்திய அரசு மீது கடும் அபராதம் விதிக்கப்படும்" என எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஏப்ரல் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்