செஸ் ஒலிம்பியாட் போட்டி: பிரதமரை நேரில் சந்தித்து அழைக்க உள்ளோம் - அமைச்சர் மெய்யநாதன் பேட்டி

மாமல்லபுரத்தில் நடக்க இருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமரை நேரில் சென்று அழைக்க உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-19 06:13 GMT

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை மாதம் 28-ந்தேதி முதல் ஆகஸ்டு 10-ந்தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரம் செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இப்போட்டி முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், செஸ் ஒலிம்பியாட் போட்டி குழுவினருடன் மாமல்லபுரத்துக்கு வருகை தந்தார்.

அங்கு போட்டி நடைபெறுவதற்கான அரங்கத்தில் நடைபெறும் பணிகளையும், வாகனங்கள் நிறுத்துவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாமல்லபுரத்தில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளில் இருந்து ஆண்கள், பெண்கள் என இருபிரிவினர் பங்கேற்க உள்ளனர். வரும் 20-ந் தேதிக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்படும். செஸ் போட்டி தமிழ்நாட்டில் நடைபெறுவதில் நாம் பெருமை கொள்ள வேண்டும்.

இன்று (செவ்வாய்கிழமை) டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து செஸ் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்க அழைப்பிதழ் வழங்க உள்ளோம்.

திருச்சியில் 2,148 அணிகள் பங்கேற்ற செஸ் போட்டியானது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் நடத்தப்பட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இந்த ஆய்வின் போது செஸ் ஒலிம்பியாட் போட்டி குழு அதிகாரி சங்கர், மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், மாமல்லபுரம் துணை-போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்