கள்ளக்குறிச்சியில் தூய்மை பணி

கள்ளக்குறிச்சியில் நடந்த தூய்மை பணியை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2022-08-04 16:48 GMT

கள்ளக்குறிச்சி, 

நாட்டின் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் கள்ளக்குறிச்சி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கா.மாமனந்தல் சாலையில் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கும் பணிகளையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், அங்கிருந்த அதிகாரிகளிடம், மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம்பிாித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இதையடுத்து டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மற்றும் கள்ளக்குறிச்சி பேருந்து நிலைய பகுதிகளில் நடைபெற்ற தூய்மை பணிகளை கலெக்டா் ஆய்வு மேற்கொண்டார். இதில் பேருந்து நிலையம் அருகே வடிகால் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு வலியுறுத்தினார். தொடர்ந்து கலெக்டா் ஷ்ரவன்குமார் கூறுகையில் 75-வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் மற்றும் நகராட்சி தூய்மை பணியாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது கள்ளக்குறிச்சி நகரமன்ற தலைவர் சுப்புராயலு, நகராட்சி ஆணையாளர் குமரன், நகராட்சி பொறியாளர் முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்