கோவை: தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு..!

கோவையில் தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

Update: 2023-03-20 06:30 GMT

கோவை,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வெல்பட்டு ரோட்டை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் அலெக்ஸ் ஜோசப் (வயது 20). மூஞ்சுக்கல் 3-வது வீதியை சேர்ந்தவர் சல்மான் (20). இவர்கள் மதுக்கரை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-வது ஆண்டு படித்து வந்தனர்.

இதற்காக இவர்கள் 2 பேரும் கல்லூரி அருகே உள்ள மேன்சனில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தனர். இன்று அதிகாலை 2 மணி அளவில் அலெக்ஸ் ஜோசப், சல்மான் ஆகியோர் அதே மேன்சனில் தங்கி உள்ள மற்றொரு மாணவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கினர்.

பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மலுமச்சம்பட்டிக்கு டீ குடிக்க சென்றனர். மோட்டார் சைக்கிளை அலெக்ஸ் ஜோசப் ஓட்டிச் சென்றார். சல்மான் பின்னால் அமர்ந்து இருந்தார். 2 பேரும் டீ குடித்து விட்டு மீண்டும் மோட்டார் சைக்கிளில் அறைக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

மோட்டார் சைக்கிள் பொள்ளாச்சி-கோவை ரோட்டில் ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் ரோட்டின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் அதிவேகமாக மோதி கவிழ்ந்தது. இதில் அலெக்ஸ் ஜோசப்பும் சல்மானும் தூக்கி வீசப்பட்டனர். 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது குறித்து மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் இறந்த கல்லூரி மாணவர்கள் அலெக்ஸ் ஜோசப், சல்மான் ஆகியோரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்