கல்லூரி மாணவர் தற்கொலை: உருக்கமான கடிதம் சிக்கியது
சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது.;
சென்னை,
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருடைய மகன் சரண் (வயது 22). பி.காம் படித்துள்ளார். இவர், சென்னை மயிலாப்பூர் ராக்கியப்பன் தெருவில் வாடகை வீட்டில் நண்பர்களுடன் தங்கியிருந்து சி.ஏ. படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்றிருந்த சரண், நேற்று முன்தினம் சென்னை திரும்பினார்.
சென்னை திரும்பிய சரணை அவரது பெற்றோர் பலமுறை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் சரணிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.
தூக்குப்போட்டு தற்கொலை
இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர், சரண் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளர் வெங்கடேசுக்கு இதுபற்றி தெரிவித்தனர். வெங்கடேஷ், சரண் தங்கியிருந்த வீட்டுக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது சரண், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக அவர் இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மயிலாப்பூர் போலீசார் சரணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உருக்கமான கடிதம்
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர், அதில் சரண் தனது பெற்றோரிடம் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு படிக்க விரும்புவதாகவும், சி.ஏ. படிக்க விருப்பமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரது பெற்றோர் அவரை சமாதானப்படுத்தி சி.ஏ. படிக்கும்படி அறிவுறுத்தி சென்னைக்கு அனுப்பி உள்ளனர். இதனால் மனம் உடைந்த சரண், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதத்தில், "அப்பா, அம்மா, தம்பி உங்களை ரொம்ப மிஸ் பண்றேன்" என குறிப்பிட்டு இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.