கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை

கல்லூரி மாணவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2023-10-17 19:54 GMT

கல்லூரி விடுதி

திருச்சி கிராப்பட்டி பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் இயங்கும் கல்லூரி மாணவர் விடுதி உள்ளது. இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தங்கி படித்து வருகிறார்கள். இங்கு 2 சமையலர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு சமையலர் மட்டுமே பணியில் உள்ளார்.

இந்தநிலையில் உணவு தரமின்றி வழங்கப்படுவதாகவும், குடிநீர் வசதி இல்லை என்றும், அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கோரியும் விடுதியில் நேற்று இரவு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, விடுதி காப்பாளர் மற்றும் சமையலர் சரிவர பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஊர்வலமாக வந்து முற்றுகை

இதனால் விடுதி காப்பாளர் மற்றும் சமையலரை கண்டித்து இந்திய மாணவர் சங்க மாநில துணை செயலாளர் மோகன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராப்பட்டியில் இருந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக நடந்தே வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மாணவர்கள், விடுதியில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. உணவு தரமாக இல்லை. விடுதியின் கழிவறையை சுத்தம் செய்ய தூய்மைப்பணியாளர்கள் இல்லை. விடுதியில் மாணவர்களை சேர்க்க பணம் வசூல் செய்கிறார்கள். எனவே சமையலரையும், விடுதி காப்பாளரையும் மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கோஷங்களை எழுப்பினார்கள்.

பேச்சுவார்த்தை

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தவசெல்வம், திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது, நாளை (இன்று) விடுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்வதாகவும், உங்கள் கோரிக்கைகளை மாவட்ட கலெக்டரிடம் கூறி 3 நாட்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அதிகாரி உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் 4 கிலோ மீட்டர் தொலைவு விடுதிக்கு நடந்தே சென்றனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்