மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு.. முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு

அறுவடைக்கு தயாரான நிலையில், 33 சதவீதம் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படுமென முதல் அமைச்சர் அறிவித்துள்ளார்.

Update: 2023-02-06 08:11 GMT

சென்னை,

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பெய்த மழையால் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் பகுதிகளில் பயிடப்பட்டிருந்த நெல் பாதிப்படைந்தது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தும் மழைநீரில் சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர்.

மேலும், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.

இதனை தொடர்ந்து, சேதமடைந்த நெல் குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்கள் சக்ரபாணி, எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ஆய்வுக்கான அறிக்கையை முதல்-அமைச்சரிடம் இன்று சமர்பித்தனர்.

இதனையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிப்படைந்த நெல் குறித்து ஆய்வு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

அமைச்சர்களின் கருத்துக்கள் மற்றும் அறிக்கையின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் நலனைக் கருத்தில்கொண்டு இழப்பீடு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

* கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயிர்சேத கணக்கெடுப்பு வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறையால் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்படும்.

* கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்து பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு இழப்பீடாக, பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும்.

* நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயிறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும்.

* நெல் தரிசில் உளுந்து தெளித்து கனமழையால் பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும்.

* கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டத்தில பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும்.

* பருவம் தவறிய கன மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனைகள் முடிக்கப்பட்டிருப்பின், கூடுதலாக மீண்டும் தற்போது மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்