ஐபிஎல் - சென்னை மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை

போட்டிக்குச் செல்வோர் பயணச்சீட்டு பெற்று பயணிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Update: 2024-05-23 09:12 GMT

சென்னை,

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெற உள்ள பிளேஆப் சுற்றின் குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, 26ம் தேதி இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதும். குவாலிபயர் 2 , இறுதிப்போட்டி இவை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தான் நடைபெறுகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் சலுகை பயணத்துக்கு அனுமதி இல்லை என போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,

நடப்பு ஐபிஎல் சீசனின் குவாலிபயர் 2 மற்றும் இறுதிப்போட்டி வரும் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம், எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முந்தைய கிரிக்கெட் போட்டிகளில் சம்பந்தப்பட்ட போட்டிக்கான நுழைவுச்சீட்டு (டிக்கெட்) வைத்திருந்தால் அதை காண்பித்து மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வரும் 24, 26 தேதிகளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளுக்கு மாநகர பேருந்துகளில் சலுகை பயணம் அனுமதியில்லை. எனவே, போட்டிக்குச் செல்வோர் பயணச்சீட்டு பெற்று பயணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்