தென் மாநிலங்களுக்கிடையே விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான கலந்தாலோசனை - மாமல்லபுரத்தில் நடந்தது

வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் மாமல்லபுரத்தில் நடந்தது.

Update: 2023-01-25 07:15 GMT

மத்திய அரசின் வேளாண் விலை மற்றும் செலவுகள் ஆணையம் ஆண்டுதோறும் காரிப் பயிர் மற்றும் ராபி பருவங்களுக்கான நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், துவரம் பருப்பு, உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை உள்ளி்ட்ட 23 வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்கிறது. மாநில அரசுகள் தங்கள் மாநிலங்களில் பயிரிடப்படும் வேளாண் பயிர்களுக்கான சாகுபடி செலவு. உள்ளூர் சந்தை விலை, வேளாண் தொழிலாளர்களுக்கான கூலி போன்றவற்றை கருத்தில் கொண்டு முக்கிய இனங்களின் அடிப்படையில் பயிர்கள் வாரியாக குறைந்தபட்ச ஆதரவு விலையை ஆணையத்திற்கு பருவம் தோறும் அறிக்கையாக சமர்ப்பிக்கின்றது.

பிறகு, மண்டலங்கள் வாரியாக மாநிலங்களில் கூட்டம் நடத்தி மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் கருத்துக்களை ஆணையம் கேட்டறிகிறது.

இந்த நிலையில் 2023- 24 ஆம் ஆண்டு காரிப்பருவ பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்வதற்காக, தென் மாநிலங்களுக்கான கலந்தாலோசனை கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடந்தது. மத்திய வேளாண் விலை மற்றும் செலவுகள் ஆணையத்தின் தலைவர் விஜய்பால் சர்மா தலைமை, தாங்கி

ஆணையத்தின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் இந்த கூட்டத்திற்கான காரணத்தை குறித்து விளக்கி பேசினார். பிறகு தென் மாநில விவசாயிகள் பிரதிநிதிகளின் கருத்துக்களையும் அவர் கேட்டறிந்தார்.

கூட்டடத்தின் முடிவில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் ஆகிய யூனியன் பிரதேசங்களின் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு காரிப்பருவ வேளாண் விளை பொருட்களுக்கான தங்களது மாநிலத்தின் குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி வேளான் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து முன்மொழிந்து பேசினார்கள்.

இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டின் சார்பாக வேளாண்மை உழவர் நலத்துறையின் இயக்குனர் அண்ணாதுரை மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரிகள், மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் ஆணையர், வேளாண்மை துறையின் உயர் அலுவலர்கள், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் என பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்