கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிப்பு

கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Update: 2023-03-30 21:03 GMT

காய்ச்சல் முகாம்கள்

தமிழகத்தில் கடந்த ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லாத நிலையில் இருந்து வந்தது. இதனால் தீவிர காய்ச்சல் பாதிப்பு கொரோனா தொற்று அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்தநிலையில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலம் முழுவதும் 'இன்புளூயன்சா' காய்ச்சல் பாதிப்பு பரவத் தொடங்கியது. இதையடுத்து காய்ச்சல் பரிசோதனை மற்றும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள மத்திய அரசு உத்தரவிட்டது.

கொரோனா பரவல் அதிகரிப்பு

இதற்காக திருச்சி மாநகராட்சி மற்றும் திருச்சி மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைத்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திருச்சி மாவட்டத்தில் தினமும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கொரோனோ பரிசோதனைகளும் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

இதனால் சென்னை, கோவை, செங்கல்பட்டு, சேலம், திருவள்ளூர், கடலூர் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக திருச்சி மாவட்டத்தில் நோய் தொற்று பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 13-ந்தேதி 0 சதவீதமாக இருந்த கொரோனா தொற்று பரவல் 14-ந்தேதி 1.4 சதவீதமாக உயர்ந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நிலவரப்படி கொரோனா நோய் தொற்று பரவல் 3.2 சதவீதமாக அதிகரித்து உள்ளது.

21 பேர் பாதிப்பு

மேலும் திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 19 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே நேரம் ஒருவர் குணமடைந்தார்.

இதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட 21 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

முககவசம் கட்டாயம்

புதிய வகை கொரோனா பரவலை தடுக்க கூட்டம் மிகுந்த இடங்களில் மக்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்வதுடன் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளவும் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். மேலும், டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிந்து பணியாற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

அதன்படி, திருச்சி அரசு ஆஸ்பத்திரி உள்ளிட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் மீண்டும் முககவசம் அணிய தொடங்கியுள்ளனர். இதற்கிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் முககவசம் கட்டாயம் அணிந்து வரவேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிப்பு பலகை மீண்டும் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்