'தினத்தந்தி' புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2023-06-11 19:00 GMT

ஆமை வேகத்தில் பஸ் நிலைய பணி

தேவாரம் பஸ் நிலைய கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதனால் பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர். எனவே கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரசன், தேவாரம்.

சேதமடைந்து வரும் சாலை

சிறுமலையில் இருந்து கடமான்குளம் செல்லும் சாலை சேதமடைந்த நிலையில் உள்ளது. ஜல்லிக்கற்கள் பெயர்ந்ததால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

-குமார், சிறுமலை.

மின்மோட்டார் பழுது 

ஆத்தூர் தாலுகா சித்தரேவு 3-வது வார்டில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் பொருத்தப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக அங்குள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பாமல் விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே மின்மோட்டாரை விரைவாக சீரமைக்க வேண்டும்.

-ஊர்மக்கள், சித்தரேவு

சாலை வசதி வேண்டும்

உத்தமபாளையம் திருவள்ளுவர் காலனி பகுதியில் உள்ள தெருக்களில் சாலைவசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துக்குமார், உத்தமபாளையம்.

முறையாக குடிநீர் வழங்க வேண்டும்

சின்னமனூர் ஒன்றியம் சீப்பாலக்கோட்டை 4-வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்கப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் போதுமான அளவு குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். மேலும் குடிநீர் தட்டுப்பாடும் உள்ளது. எனவே முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லட்சுமணன், சீப்பாலக்கோட்டை.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் அம்பேத்கர் காலனி, புதுரோடு ஆகிய இடங்களில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே அம்பேத்கர் காலனி, புதுரோடு பஸ் நிறுத்த பகுதியில் நிழற்குடை அமைக்க வேண்டும்.

-மணி, கூடலூர்.

செல்போன் சேவை பாதிப்பு

கோபால்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரங்களில் இருந்து முறையாக சிக்னல் கிடைப்பதில்லை. இதனால் அங்கு பி.எஸ்.என்.எல். செல்போன் எண்ணை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே செல்போன் கோபுரத்தில் இருந்து முறையாக சிக்னல் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அந்தோணி, கொசவப்பட்டி.

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி 

எரியோடு ராமசாமிநகரில் திண்டுக்கல் சாலையில் விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதற்காக சாலையில் ஜல்லிக்கற்கள் பரப்பப்பட்டு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அந்த பணிகள் தற்போது பாதியில் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே சாலை பணியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கருப்பையா, எரியோடு.

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் 

வேடசந்தூர் மாரம்பாடி சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரக்கேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழ்பிரியன், வேடசந்தூர்.

தடுப்புச்சுவர் சேதம்

கோபால்பட்டியில் திண்டுக்கல்-நத்தம் சாலையின் மையப்பகுதியில் விபத்தில் சேதமடைந்த தடுப்புச்சுவர் சீரமைக்கப்படாமல் உள்ளது. மேலும் அதன் முன்பு இரவில் ஒளிரும் தடுப்புகள் வைக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த தடுப்புச்சுவரை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், கோபால்பட்டி.

----------------

உங்கள் புகார்களை இணையதளம் மூலமாகவும் https://pukaarpetti.dailythanthi.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம்.

---------------

Tags:    

மேலும் செய்திகள்