ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
குமாரபாளையம்
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குமாரபாளையம் தாசில்தார் அலுவலகம் அருகில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் மாரிமுத்து வரவேற்றார். அரசு பணியாளர் சங்கத்தின் பிரசார செயலாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற வட்டார தலைவர் கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினா். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாசம், அரசு பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேசன், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசு அறிவிக்கும் நாளிலிருந்து அகவிலைப்படி வழங்க வேண்டும், சத்துணவு வருவாய் கிராம உதவியாளர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றியவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், உயர்கல்வி ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் வட்டாரத் தலைவர் செல்லதுரை நன்றி கூறினார்.