திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

வங்கிகளில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-05-24 17:30 GMT

தர்மபுரி:

வங்கிகளில் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்யக்கோரி தர்மபுரியில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

வங்கி பணிக்கான தேர்வுகளில் தமிழ்மொழியை புறக்கணிக்கக் கூடாது. வங்கி தேர்வுகளை தொடர்ந்து தமிழ் மொழி வாயிலாகவும் நடத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாநில இளைஞர் அணி துணை செயலாளர் செல்லதுரை தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன், திராவிடர் மாணவர் கழக மண்டல செயலாளர் சமரசம், மாவட்ட நிர்வாகிகள் யாழ் திலீபன், கருபாலன், கிருஷ்ணமூர்த்தி, பிரபாகரன், அருணா உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

வேலைவாய்ப்பு

தமிழகத்தில் செயல்படும் வங்கிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் பிரிவினர் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் செயல்படும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஏற்கனவே இந்தி மொழி பேசும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதை கருத்தில் கொண்டு வங்கிப் பணிகளில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள வங்கிகளில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்களின் நலன் கருதி தமிழ் மொழியில் பேசுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் திரளாக கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்