கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

கிருத்திகையையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.

Update: 2023-10-04 06:34 GMT

திருத்தணி முருகன் கோவில் முருகப்பெருமானின் புகழ்பெற்ற 5-ம் படை திருத்தலமாகும். இந்த கோவிலில் மாதம்தோறும் நடக்கும் கிருத்திகை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபடுவர். இந்த நிலையில் நேற்று கிருத்திகையையொட்டி மூலவர் முருகபெருமானுக்கு பால், தயிர், பழம், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள், இளநீர் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு ஆராதனைக்கு பிறகு தங்க கவச அலங்காரத்தில் மூலவர் முருகபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கிருத்திகை தினம் மற்றும் செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உகந்த தினம் என்பதால் நேற்று ஏராளமான பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

மேலும் சில பக்தர்கள் காவடிகளுடன் வந்தும், பஜனை குழுவினர் திருப்புகழ் பாடியும், அலகு குத்தியும் மூலவரை தரிசித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதனால் பொது வழியில் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர். அதேபோல் ரூ.100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் ஒரு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்