'தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது' - அமைச்சர் அன்பில் மகேஷ்

அடுத்ததடுத்த தேர்வுகளுக்கு மாணவர்களை வரவழைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Update: 2023-03-16 07:18 GMT

சென்னை,

தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி நடப்பு ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந்தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளன்று மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், மொழித் தேர்வை 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்வு எழுத வராத மாணவர்கள் குறித்து விசாரிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போது அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது;-

"தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மொழிப்பாடத் தேர்வை 50 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுத வராதது ஏன் என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவிலான மாணவர்கள் ஆப்செண்ட் ஆகியுள்ளனர். அடுத்து வரும் தேர்வுகளில் ஆப்செண்ட் ஆகும் மாணவர்கள் குறித்து உடனடியாக ஆய்வு செய்து காரணத்தை கண்டறிய வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து மாவட்ட வாரியாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அடுத்ததடுத்த தேர்வுகளுக்கு மாணவர்களை வரவழைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தேர்வின் அவசியத்தை மாணவர்களுக்கு வலியுறுத்தி பெற்றோர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது."

இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்