ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது -எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது என கடலூரில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்த எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

Update: 2022-11-16 07:31 GMT

கடலூர்:

Full View

வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக சிதம்பரம் பகுதியில் கனமழை கொட்டி தீர்த்தது. ஒரே நாளில் 30 செ.மீ.மழை பெய்ததால் அந்த பகுதி முழுவதும் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியை பார்வையிடுவதற்காக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடலூர் மாவட்டம் வந்தார்.

சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் அவர் வெள்ள சேதங்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

பின்னர், பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் பேசுகையில

தமிழகத்தில் ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் ஏழை மக்களுக்காக செயல்படும் ஒரே இயக்கம் அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, நான் முதல்வராக இருக்கும் வரை ஏழை மக்களுக்காக பணி செய்தோம். பருவமழை காலங்களில் குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் கனமழைக்கு பாதிக்காத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வெள்ளபாதிப்புகளை தடுத்தது அ.தி.மு.க. அரசு.

குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஆதனூர், குமாரமங்கலம் இடையே ரூ.500 கோடி செலவில் கதவணை அமைத்து வெள்ள பாதிப்பை தடுத்தது அ.தி.மு.க. அரசு. ஒரே ஆண்டில் 2 முறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு பயிர்கடனை முறையாக தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. அரசு. எம்.ஜி.ஆர். காலம் தொட்டு ஏழை மக்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருவது அ.தி.மு.க. அரசு. ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை காழ்புணர்ச்சி காரணமாக தி.மு.க. அரசு கைவிட்டது. குறிப்பாக அம்மா கிளினிக் மூடப்பட்டது. 

, " அம்மா இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு கைவிட்டுவிட்டது. அதேபோல் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டமும் அப்படித்தான். இன்றைக்கு ஒரு பவுன் 38 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் திருமண வயதை எட்டும்போது, பொருளாதார நிலையின் காரணமாக திருமணம் தடைபடுகிறது. அதுபோல் யாரும் பாதிக்கப்படக்கூடாது என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொலைநோக்குப் பார்வையுடன் ரூ. 25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் உதவித்தொகை மற்றும் தாலிக்கு ஒருபவுன் தங்கம் என்ற திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு முடக்கியுள்ளது.

தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்துகொண்டிருக்கிறது. ஏழைகள் எப்போதெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அ.தி.மு.க. உங்களுக்கு துணை நிற்கும், சேவை செய்யும்" என்று அவர் பேசினார்.

அதுபோல் சீர்காழி அருகே நல்லூரில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார் ஏதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி; கனமழை பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்